டோல்பூர்: சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கரீப் ராத் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து புறப்பட்ட கரீப் ராத் விரைவு ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் அருகே ரயில் வந்து கொண்டு இருந்த நிலையில், ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே நிர்வாகத்திற்கு மர்ம நபர்கள் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் ரயிலின் G-2 பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து உள்ளூர் நிர்வாகம், மோப்பநாய் படை, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், உள்ளூர் போலீசார் உள்ளிட்டவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. டோல்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ஏறத்தாழ மூன்றரை மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரிய வந்தது. இதனால் அதிகாரிகள், மற்றும் பயணிகள் கடும் மன உளச்சலுக்குள்ளாகினர். போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் அதே ரயிலில் பயணித்த 4 பேரை கைது செய்தனர்.
மூன்றரை மணி நேர சோதனைக்கு பின்னர் பாதுகாப்பு மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயிலை திருப்பி அனுப்பினர். மேலும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் வழங்கிய நான்கு பேரை கைது செய்த போலீசார், என்ன காரணத்திற்காக போலி தகவல் அளித்தனர் என விசாரித்து வருவதாக கூறினர்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!