நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. வைரஸ் பரவலைக் கண்டறிய அதிக அளவிலான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், ஹெபல் அருகே உள்ள கோடிஜஹள்ளி கரோனா பரிசோதனை மையத்தில், தங்களது பணி இலக்கை முடித்திட ஊழியர்கள் குறுக்கு வழியைக் கையிலெடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அங்கிருக்கும் ஊழியர்கள், கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் ஸ்டிக்குகளை (swab sticks) அவர்களே உடைத்து எறிந்துவிட்டு கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தியது போல் கணக்குக் காட்டி வருகின்றனர். இதன் மூலம், அவர்களின் தினசரி இலக்கை முடித்துவிட்டதாக காண்பித்து சுகாதாரத் துறையை ஏமாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், ஊழியர்கள் ஸ்டிக்குகளை உடைக்கும் காணொலி, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அங்கிருந்து ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோடிஜஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் பயிற்சி மருத்துவரைத் தாக்கிய இளைஞர்கள்