அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாள்கள் கடந்த நிலையில், அசாமில் பாஜக தலைமையிலான கூட்டணி 75 இடங்களைப் பிடித்துள்ளது. இருப்பினும் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து பாஜக தலைமை இன்னும் ஒரு முடிவு எடுக்கவில்லை. ஆனால், அசாமின் தற்போதைய முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவருக்குமிடையே முதலமைச்சராவதற்கு கடும்போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே, விரைவில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம் என்று பாஜக தலைமை கூறியுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள ஏஜிபி (AGP), யுபிபிஎல் (UPPL) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒரு விடுதியில் சந்தித்தனர். அப்போது, அடுத்த முதலமைச்சர் குறித்த கேள்விக்கு இரு கட்சிகளின் தலைவர்களும் மெளனமாக இருந்தனர். இருந்தபோதிலும், இரு கட்சிகளும் அடுத்த முதலமைச்சராக ஹிமாந்த பிஸ்வா சர்மாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். இந்நிலையில், பாஜக தலைமை சர்பானந்தா சோனோவாலின் பெயரை முன்மொழியுமா அல்லது ஹிமந்தா பிஸ்வா சர்மாவை ஆதரிக்குமா என்ற கேள்விக்கு விடை பெற மக்கள் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ’கோவிட்-19 மூன்றாம் கட்டம் தவிர்க்க முடியாதது’ - கே. விஜய் ராகவன்