ஒரு நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் அவரை வரவேற்றனர். அதன் பின்னர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஏஎப்டி மைதானத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் நட்டா பேசுகையில், ’பல மக்கள் நலத்திட்டங்கள் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 6 லட்சம் எல்இடி பல்புகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. 13,500 இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆயிரம் ஏழை பெண்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. இந்த ஜிப்மர் மருத்துவமனை காரைக்காலில் அமைக்கப்பட்டு வருகிறது. கரோனாவிற்கு ஒரே நாளில் 10 லட்சம் சோதனைகள் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 3 லட்சம் வென்ட்டிலேட்டர்கள் ,கோவிட் கிட்டுகளையும் தயாரிக்கிறோம். தடுப்பு மருந்து கண்டுபிடித்து உலக அளவில் இந்தியா முன்னேற்ற பாதையில் உள்ளது. நோய் தடுப்பு மருந்துகள் இந்தியாவில்தான் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது இணை அமைச்சராக இருந்த நாராயணசாமி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். புதுச்சேரியில் கடன் தள்ளுபடி செய்யவில்லை,மாறாக மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டார். புதுச்சேரியின் நிலை விரைவில் மாறும். பாஜக 23 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைந்தவுடன் கிடப்பில் உள்ள அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடங்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். ஆட்சி மாற்றம் வந்த பிறகு ஊழல் இல்லா ஆட்சி எப்படி இருக்கும் என்பதை புதுச்சேரி மக்கள் உணர்வார்கள். உங்கள் உற்சாகத்தை காணும்போது பாஜகவிற்கு 23க்கும் மேற்பட்ட இடங்களை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்’என்றார்.
இதையும் படிங்க:வரும் பிப்.14 தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!