டெல்லி : பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா திங்கள்கிழமை (ஜன.24) பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடந்தது. இந்தச் சந்திப்பின்போது ஜெ.பி. நட்டா , “பாஜக மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங் (Captain Amarinder Singh) தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ் ( Punjab Lok Congress), சக்யுக்தா அகாலி தளம் தின்சா (Samyukta Akali Dal-Dhindsa) உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன” என்றார்.
அதன்படி பா.ஜனதா கட்சிக்கு 67 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 37 தொகுதிகளில் பஞ்சாப் லோக் காங்கிரஸூம், 15 தொகுதிகளில் க்யுக்தா அகாலி தளம் தின்சா கட்சியும் போட்டியிடுகின்றன.
இது குறித்து ஜெ.பி. நட்டா மேலும் கூறுகையில், “பஞ்சாப் நிலையாக இருந்தால் நாடு நிலையாக இருக்கும். பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பில் பஞ்சாப்பின் பங்களிப்பை நாடு மறக்க முடியாது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பஞ்சாப் எப்போதும் நிறைவேற்றி வருகிறது” என்றார்.
தொடர்ந்து, “நாட்டின் பாதுகாப்பிற்கு, பஞ்சாப் மாநிலத்தில் “நிலையான மற்றும் வலுவான அரசாங்கம்” அமைவது அவசியம் என்று கூறினார். பாகிஸ்தானின் நடவடிக்கைகள் நம் நாட்டிற்கு எப்படி இருந்தன என்பது நமக்கு தெரியும். போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்த முயற்சிகள் நடப்பதை நாம் பார்த்துவருகிறோம்” என்றார்.
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்.20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
கோவிட் பரவல் காரணமாக நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு ஜன.31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Punjab Polls 2022: பஞ்சாப் தேர்தலில் அமரீந்தர் சிங் போட்டி!