அயோத்தியா (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச காவல் துறையினர் பாஜக எம்எல்ஏ சந்திர யாதவின் மகன் அலோக் யாதவ் மீது கொள்ளை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கந்தசா காவல் நிலையத்தில் ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த ஷ்யாம் பகதூர் சிங் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், 'கடந்த திங்கட்கிழமை நான்கு பேர் கொண்ட குழுவினர் வாகனத்தில் வந்து அவரைத் தாக்கியதாகவும், அவர்களிடம் உள்ள துப்பாக்கியை காட்டி கொன்றுவிடுவதாக மிரட்டி கடுமையாக தாக்கியதாகவும்' தெரிவித்துள்ளார். இந்த வாகனத்தை அலோக் யாதவ் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அக்குழுவினர் தன்னிடம் இருந்த ரூ. 1 லட்சம் பணத்தைப் பறித்து சென்றதாகவும் ஷ்யாம் கூறினார்.
பணம் பறி போனதும் கூச்சலிட்ட ஷ்யாமின் குரலுக்கு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். கூட்டத்தைக்கண்டதும் அந்த நால்வரும் தப்பித்து ஓடி விட்டனர். மேலும் இந்த நிகழ்வு அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்தப் புகார் அளித்திருப்பதால் தனது குடும்பத்திற்கும், தனக்கும் எம்எல்ஏ சந்திர யாதவால் பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருப்பதால், தங்கள் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்தான் பொறுப்பு எனவும் ஷ்யாம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:இரு வேறு இடங்களில் காரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!