கடந்த சில வாரங்களாகவே மனுஸ்மிருதி பஞ்சாயத்துதான் தமிழ்நாட்டில் முக்கிய பேசும்பொருளாக இருந்தது. மனுஸ்மிருதியில் கூறப்பட்டிருந்து எனக் குறிப்பிட்டு விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், இந்தியில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி குறித்து இடம்பெற்ற கேள்வி இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் 6.40 லட்ச ரூபாயக்கான கேள்வி, "1927ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பின்வரும் எதன் நகல்களை எரித்தார்?"
(அ) விஷ்ணு புராணம் (பி) பகவத் கீதை, (சி) ரிக் வேதம் (டி) மனுஸ்மிருதி" என்று இடம்பெற்றியிருந்தது.
இந்தக் கேள்விக்கு பங்கேற்பாளர்கள் மனுஸ்மிருதி என்று பதிலளித்துள்ளனர். அதன் பின் அமிதாப் பச்சன் பேசுகையில், "1927 ஆம் ஆண்டில், சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமையை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தும் பண்டைய இந்து நூலான மனுஸ்மிருதியின் நகல்களை அம்பேத்கர் எரித்தார்" என்று கூறினார்.
இந்தக் கேள்விக்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அனைத்து ஆப்ஷன்களும் இந்து மதத்தையே குறிக்கும் வகையில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள நெட்டிசன்கள், கோடீஸ்வரன் நிகழ்ச்சி முற்றிலும் இடதுசாரிகளின் கைககளில் உள்ளது என்றும் தெரிவித்தனர்.
இந்தக் கேள்வியும் அமிதாப்பின் பதிலும் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் உள்ளதாக சில நெட்டிசன்கள் இணையதளத்தில் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அமிதாப் பச்சன் மற்றும் சோனி என்டர்டெயின்மென்ட் ஆகியவை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ அபிமன்யு பவார் காவல் துறையில் புகாரளித்துள்ளார். மேலும், இந்து மதத்தை புண்படுத்தியதாக அமிதாப் பச்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெங்கட் பிரபுவின் புதிய ஆந்தாலஜி 'விக்டிம்'