தெலங்கானா: ஹைதராபாத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் என்பவர் முகமது நபி குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. யூ-ட்யூபில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ வைரலானது.
இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்யக்கோரி ஹைதராபாத்தின் பல பகுதிகளில், நேற்று (ஆக. 22) இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டக்காரர்கள் நகரின் பல காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குறிப்பாக, பஷீர்பாஹ் பகுதியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதில், அந்த சாலை முழுவதும் முடக்கப்பட்டது. மேலும், தெற்கு மண்டல் துணை காவல் ஆணையர் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டது.
இந்நிலையில், ராஜா சிங் ஹைதராபாத் போலீசாரால் இன்று (ஆக. 23) கைது செய்யப்பட்டார். ராஜா சிங், ஹைதராபாத்தின் கோஷ்மஹால் தொகுதியில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார்.
ராஜா சிங் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படும் அந்த வீடியோவில், அவர் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கி குறித்து விமர்சனம் செய்தார்.அப்போது, முகமது நபி குறித்து நுபுர் சர்மா தெரிவித்த அதே வரிகளை ராஜா சிங் பயன்படுத்தியதாக தெரிகிறது.
முன்னதாக, நகைச்சுவை நடிகர் முனாவரின் நிகழ்ச்சியில் இந்து கடவுள்களை அவமித்ததாக கூறி, கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற இருந்த அவரின் நிகழ்ச்சியை ராஜா சிங் தடுப்பதற்கு முயற்சி செய்தார். இதைத் தொடர்ந்து, மாதாப்பூர் பகுதியில் நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தை 50 பேர் கொண்ட கும்பலுடன் சென்று முற்றுகையிட அவர் திட்டமிட்டதாக கூறப்பட்டது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ராஜா சிங் தனது இந்துத்துவா கருத்துகளால் அந்த பகுதியில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமித்ஷாவின் செருப்புகளை கையில் எடுத்துச்சென்ற பாஜக தலைவர்... இணையதளத்தில் சர்ச்சை