கொப்பல்: கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அம்மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தின் யலால்புர்கா சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹலப்பா அச்சாராவை ஆதரித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகௌடா படில் யாத்னால் நேற்று (ஏப்ரல் 27) மாலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய படில் யாத்னால், “பிரதமர் நரேந்திர மோடியை விஷத் தன்மை கொண்ட பாம்பு என நீங்கள் (மல்லிகார்ஜூன கார்கே) கூறுகிறீர்கள். அப்படியானால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விஷப் பெண்ணா? தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை பாம்புடன் ஒப்பிட்டார். கார்கே ஒரு மூத்தவர். நான் அவருக்கு மரியாதை அளிக்கிறேன். எப்படி ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி இவ்வாறு கார்கே பேசினார்?
பிரதமர் மோடியை உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்கா ஒரு முறை பிரதமர் மோடிக்கு விசா கொடுக்கவில்லை. ஆனால், தற்போது மோடி உலகத் தலைவராக உள்ளார். சோனியா காந்தி நாட்டை சீரழித்தது மட்டுமல்லாமல், சீனா மற்றும் பாகிஸ்தானின் ஏஜென்டாக வேலை செய்தார். மணி ஷங்கர் ஐயர் என்பவர், சீனா மற்றும் பாகிஸ்தானிடம் உதவி கேட்டு, மோடியை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறி இருந்தார்.
அப்படிப்பட்ட காங்கிரஸுக்கு இன்று எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தகுதி இல்லை. கார்கே தனது அறிக்கையால் நாட்டின் பிரதமரை அவமதித்துள்ளார். இதனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. லிங்காயத் அனைவரும் ஊழல்வாதிகள் என சித்தராமையா தெரிவித்திருந்தார். நீங்கள் (சித்தராமையா) எங்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால், நாங்கள் அதனை பொறுத்துக் கொள்வோம். அதேநேரம், நீங்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தை களங்கப்படுத்தினால், அது சரியல்ல.
முன்னதாக பாஜக ஆட்சியில் இருந்தபோது யலபுர்கா தொகுதிக்காக ‘கிருஷ்ணா பி’ திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. பஞ்சமசாலிஸ்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. இதனை எல்லாம் பார்க்கும்போது, அவரது (யலபுர்கா காங்கிரஸ் வேட்பாளர்) மூளைக்கும் இதயத்துக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியும். கணபதி மற்றும் டிஜே ஆகியவற்றை நாட்டின் எந்த மூலையில் வைப்பதற்கும் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய தேவை இல்லை.
இந்துக்கள் மீது கல் விழுந்தால், உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல் புல்டோசரை போடுவோம்” எனக் கூறினார். முன்னதாக, இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கோரினார். ஆனால், பாஜக எம்எல்ஏவின் இந்த பேச்சைத் தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: Karnataka Elections 2023 : ரூ.25 ஆயிரத்துக்கு வாக்காளர்கள் தகவல் விற்பனை! பகீர் தகவல்!