இடா நகர்: அருணாச்சலப் பிரதேசம் சட்டப்பேரவையில் பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் விடுமுறை அளிக்க பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், அதனை ‘லிட்ரா சீஸ்(அழுக்கான ஒன்று)’ என்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.
மாதவிடாய் ஒன்றும் தீண்டத்தகாத ஒன்றல்ல
இதுகுறித்து அருணாச்சால பிரதேச பெண்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கனி நடா மாலிங் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறுகையில், ”சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பதில் தங்களுக்கு எதிர் கருத்து இருப்பினும் அதை சரியான புரிதலுடன் கையாண்டிருக்க வேண்டும்.
கொச்சை வார்த்தைகளில் பெண்களின் இயற்கையான உடல் சார்ந்த செயல்பாடுகளை குறிப்பது அவர்களை அவமதிப்பதாகும். மாதவிடாய் ஒன்றும் தீண்டத்தகாத ஒன்றல்ல. ஆகையால், மரியாதைக்குரிய சட்டப்பேரவை உறுப்பினர்களை தாங்கள் சட்டப்பேரவையில் பயன்படுத்தும் வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
புனிதமான சட்டப்பேரவையில் இதுபோன்ற விஷயங்கள் குறித்துப் பேசுவதா..?
மாதவிடாயின் முதல் நாளின்போது விடுமுறை அளிக்கும் சட்டமசோதாவை அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவையில் கோரிக்கையாக வைத்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் நினோங் எரிங், கேரளா, பிஹார் போன்ற மாநிலங்களை உதாரணம் காட்டி பெண்களுக்கு இது மிக உதவியாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால், கோலோரியாங் தொகுதியின் பாஜகவைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் லோகம் தஸ்ஸார், 'புனிதமான சட்டப்பேரவையில் இது போன்ற அழுக்கான விஷயங்கள்(லிட்ரா சீஸ்) குறித்து பேசுவது முறையல்ல’ எனத் தெரிவித்தார். மேலும், மாதவிடாய் காலங்களில் நியிஷி பழங்குடியின மக்கள், பெண்களை ஆண்களோடு அமர்ந்து உணவு அருந்தக் கூடத் தடை விதித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அதன்பின், அருணாச்சலப் பிரதேசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அலோ லிபாங், இந்தத் தீர்மானத்தை திரும்பப் பெறும்படி எரிங்கிடம் கேட்டுக்கொண்டார். இதுகுறித்தான முடிவுகள் சட்டப்பேரவையின் பிற பெண் உறுப்பினர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.