கன்கேர் (சத்தீஸ்கர்): சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் பகஞ்சூர் பகுதியில் நேற்று (ஜன.07) பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பகஞ்சூர் பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான அசீம் ராய் இந்த சம்பவத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள், "பகஞ்சூர் பகுதியில் பூரான பஜாரில் இரவு 8:30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அசீம் ராய் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டு வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
ராயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்கட்ட பரிசோதனையில் ராய் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை.” எனத் தெரிவித்தனர்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவரான அசீம் ராஜ் கான்கேர் மாவட்டத்தின் பாஜக துணைத் தலைவராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அசீம் ராயின் கொலைக்கு அரசியல் போட்டி காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை வழக்கை பஸ்தார் சரக ஐஜி சுந்தர் ராஜ் விசாரித்து வருகிறார். முன்னதாக 2014ஆம் ஆண்டிலும் அசீம் ராய் மீது இரண்டு முறை கொலை முயற்சி நடந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டது கன்கேர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பில்கிஸ் பானு வழக்கு; 11 பேரின் விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!