மேற்குவங்கத்தில் நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பேசவிடாமல் பாஜகவினர் கோஷம் எழுப்பினர். இது பெரும் சர்ச்யை கிளப்பிய நிலையிலும், அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கோஷம் எழுப்பிய பாஜகவினரை கண்டிக்காமல், உரை நிகழ்த்தினார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகருமான ராமேஷ்வர் சர்மா, மம்தாவுக்கு ராமாயண புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். ஜெய் ஸ்ரீராம் கோஷத்தால் மம்தா வருத்தமடைந்துள்ளதாகவும், எனவே ராமாயணத்தை அவர் கவனமாக படிக்க வேண்டும் எனவும் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மம்தா வங்கதேசத்திடமிருந்து அழுத்தத்தை எதிர்கொள்கிறாரா? ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்திற்கு ஏன் அவர் அச்சப்படுகிறார்? வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மையினரை கண்டு அவர் அச்சப்படுகிறாரா? ஜெய் ஸ்ரீராம் கோஷாத்தால் ஏன் அவர் கோபமடைகிறார்? வங்கதேசத்திலிருந்து அவர் வந்துள்ளரா?
வந்தே மாதரம் என்ற கோஷம் முதன் முதலில் மேற்குவங்கத்தில்தான் எழுப்பப்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட தத்துவவாதிகளை தந்த மாநிலம் மேற்குவங்கம். ராமரின் பக்தர்கள் இந்தியாவின் கோஷத்தை எழுப்பாமல் வேறு எங்கு எழுப்ப சொல்கிறிர்கள்?" என்றார்.