ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் தீவிர அரசியலில் இருந்து விலக மறுத்ததாக பாஜக தலைவர் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டு நடுரோட்டில் எச்சரிக்கை குறிப்புடன் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் காகா அர்ஜூன். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான காகா அர்ஜூன், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு பலமுறை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தீவிர அரசியலில் இருந்து விலகுமாறு காகா அர்ஜூனுக்கு, மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காகா அர்ஜூனை மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் வெட்டி படுகொலை செய்த நிலையில் எச்சரிக்கை குறிப்புடன் அவரது சடலத்தை வீதியில் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.
நடப்பாண்டில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நான்காவது பாஜக தலைவர் காகா அர்ஜூன் என போலீசார் தெரிவித்து உள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்கள் விட்டுச் சென்ற எச்சரிக்கை கடிதத்தில், பலமுறை எச்சரித்தும் தீவிர அரசியலில் இருந்து விலகாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போலீசார் உள்பட இருவர் பஸ்டார் பிஜாபூர் மாவட்டத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், அவர்களையும் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கொன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. பாஜக தலைவர் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள மாநில பாஜக பொதுச் செயலாளர் ஓ.பி சவுத்ரி, காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் பாஜக தலைவர் கொல்லப்பட்டு இருக்க முடியாது என்றும் அரசியலுக்காக கொலை சம்பவம் நிகழ்த்துப்பட்டு இருப்பதாக கூறினார்.
காங்கிரஸின் ஆதரவு இல்லாமல், பஸ்தார் பிரிவில் பாஜக மூத்த தலைவரை குறிவைத்து அரசியல் கொலைகள் நடத்த சாத்தியமில்லை என்றும் பாஜக தலைவர்களை குறிவைக்க காங்கிரசுடன், நக்சல் பயங்கரவாதிகள் கைகோர்த்து இருப்பது போல் தெரிவதாகவும் அவர் கூறினார். இந்த கொலைச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தனஜெய் சிங் தாகூர், இந்த கொலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் இந்த விசயத்தை பாஜக அரசியலாக்குகிறது என்றும் குற்றம் சாட்டினார். சத்தீஸ்கரில் முன்னாள் பாஜக முதலமைச்சர் ராமன் சிங் ஆட்சியில், நக்சலிசம் பெருமளவில் பரவியதை எப்படி மறக்க முடியும் என்றும் இந்த சம்பவத்திற்கு பூபேஷ் பாகேல் அரசு இரங்கல் தெரிவித்து, துணை நிற்பதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடியின் யோகா தின விழா!