புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ.,க்கள் ஆறு பேரின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து, மே 7ஆம் தேதி ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் ஆன நிலையில், புதுச்சேரியில் அமைச்சர்கள் யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதற்கு ஒன்றிய பாஜக அரசு, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் கடும் நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஜூன்.02) புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் வைத்து மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், சாய் சரவணன், பாஜக ஆதரவு சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெங்கடேசன், அசோக் பாபு, ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சாமிநாதன் கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைச்சர்கள், சபாநாயகர் பங்கீடு முடிந்தது. பாஜகவிற்கு சபாநாயகர் பதவியும் அமைச்சர்கள் பதவியும் தர உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. பாஜக வெற்றி வேட்பாளர்கள் எத்தனை பேர் அமைச்சரவையில் இடம் பிடிப்பர் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னும் சில நாள்களில், புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜக சபாநாயகர் பதவி ஏற்பார். அதைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பமில்லை. திமுக-காங்கிரஸ் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. பாஜக தலைமையே சபாநாயகர், அமைச்சர்கள் யார் யார் என அறிவிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமையும் அமைச்சரவை மக்களுக்காக பாடுபடும்" என்றார்.