ஒடிசா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜூ ஜனதா தளம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 851 ஜில்லா பரிஷத் இடங்களில், 766 இடங்களை பிஜூ ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை விட மகத்தான வெற்றியை பிஜூ ஜனதா தளம் வெற்றிபெற்றுள்ளது.
2017ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் 473 இடங்களை பிஜூ கட்சி பெற்ற நிலையில், இந்த தேர்தலில் 290 இடங்களை கூடுதலாக அக்கட்சி பெற்றுள்ளது. இரண்டு கோடியே 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் 52.73 விழுக்காடு வாக்குகளை பிஜூ ஜனதா தளம் பெற்றுள்ளது. அதேவேளை இத்தேர்தலில் பாஜக கடும் சரிவைக் கண்டுள்ளது.
2017ஆம் ஆண்டு 297 இடங்களை கைப்பற்றியிருந்த பாஜக, இந்த தேர்தலில் 255 இடங்களை இழந்து வெறும் 42 இடங்களையே வென்றுள்ளது. மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஒரு இடங்களைக் கூட பாஜகவால் கைப்பற்ற முடியவில்லை. அதேபோல், கடந்த தேர்தலில் 60 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்து வெறும் 37 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.
ஒடிசாவின் மிகவும் செல்வாக்கு மிக்க முதலமைச்சராக திகழ்ந்துவரும் நவீன் பட்நாயக் 2000ஆம் ஆண்டு முதலமைச்சராக முதல் முதலில் பதவியேற்றார். அதன்பின்னர் தோல்வியே சந்திக்காத நவீன் 21 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சி நடத்திவருகிறார்.
இதையும் படிங்க: உக்ரைன் விவகாரம்: ஐரோப்பிய தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு