புதுச்சேரி: MGR Birthday Anniversary: ஜனவரி 17ஆம் தேதியான இன்று, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்ட பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை,
- 'நான் பார்த்த வகையில் மனிதநேயமிக்க ஒரு தலைவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன். பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, குழந்தைகளுக்கு எந்த வகையிலும் எந்தப்பாதிப்பும் இல்லாமல் உணவு கிடைக்கச்செய்தவர். சாமானிய மக்களுக்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர். அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்.
- மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் இன்று வேக சக்தி தொடர்பான இணைய மாநாடு நடைபெறுகிறது. நாட்டில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விரைவுபடுத்துவதற்காக “வேக சக்தி“ என்ற திட்டத்தைப் பாரதப் பிரதமர் தொடங்கி இருக்கிறார். இதில் 16 அமைச்சர்கள் ஒன்றிணைந்து அனைத்து வகையிலும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காகத் திட்டமிடுகிறார்கள்.
- புதுச்சேரி அதில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. இது புதுச்சேரிக்குக் கிடைத்த பெருமை. அந்தப் பெருமைமிகு மாநாட்டில் நானும் முதலமைச்சரும் பங்கு கொள்கிறோம். புதுச்சேரிக்குச் சாலை, ரயில், விமானம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த ஆலோசனை செய்யப்படும்.
- புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்துவது, காரைக்காலில் விமான நிலையம் கொண்டு வருவது, புதிய ரயில் பாதைகள் அமைப்பது, அதிக சாலை வசதிகளை ஏற்படுத்துவது, துறைமுகங்களைப் பலப்படுத்துவது என்று அனைத்து வகையிலும் ஒட்டுமொத்தமான புதுச்சேரியின் வளர்ச்சிக்கு இந்த “வேக சக்தி“பயன் தரும்'
என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி