இந்தியா கரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டதாக உலகின் முன்னணி தொழிலதிபரும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் தடுப்பூசி தயாரிப்பிலும் இந்தியத் தலைமை சிறப்பாக செயல்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் உலகமே போராடி வரும் நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் தடுப்பூசி தயாரிப்பிலும் இந்தியத் தலைமை சிறப்பாக செயல்பட்டது" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பிரதமர் அலுவலக கணக்குடன் அவர் டேக் செய்துள்ளார்.
முன்னதாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டிஜிட்டல் தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்டறியும் வகையில் ஆரோக்ய சேது செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கு, தனிமைப்படுத்துதல், விரிவான மருத்துவ சோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கு உங்கள் தலைமையை பாராட்டுகிறேன். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த அதற்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டது" என குறிப்பிட்டிருந்தார்.