குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின்போது, 20 வயது கர்ப்பிணி இஸ்லாமியப்பெண்மணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை, கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுவித்தது. இவர்கள் 11 பேரும் சுதந்திர தினத்தன்று(ஆக.15) விடுதலை ஆனார்கள். குஜராத் அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையானவர்கள் குறித்து செய்தியாளரிடம், குஜராத்தின் பாஜக எம்எல்ஏ-வான சிகே ராவுல்ஜி பேசும்போது, சிறையில் இருந்தவர்கள் பிராமணர்கள் என்றும் அவர்களுக்கு என்று சில நற்பண்புகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில்,"அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், குற்றமிழைக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்துள்ளது. அவர்கள் அனைவரும் பிராமணர்கள். நற்பண்புகளுக்கு பெயர் போனவர்கள் பிராமணர்கள். இவர்கள் மீது குற்றஞ்சாட்ட வேண்டும் என்ற தீய நோக்கில் யாரோ இவர்களை சிக்க வைத்திருக்கலாம்" என ரவுல்ஜி கூறியுள்ளார்.
பாஜக எம்எல்ஏவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து ட்விட்டரில் ஒருவர்,"பாஜக தற்போது பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 'நற்பண்பு உடையவர்கள்' என்றழைக்க தொடங்கிவிட்டது. இதற்குமேல் ஒரு கட்சியால் தரம் தாழ முடியாது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி துணை முதலமைச்சர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை