டெல்லி: கடந்த 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் நன்னடத்தை காரணமாக முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ப்பட்ட வழக்கு இன்னும் இரு நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.இந்நிலையில், இந்த பலாத்கார வழக்கில் சிறை சென்று விடுதலையான சைலேஷ் சிம்மன்லால் பாட், அரசு விழாவில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதில் கலவரத்தில் இருந்து தப்பிக்க முயன்ற பில்கிஸ் பானு குடும்பத்தினரை 11 பேர் கொண்ட கும்பல் கொடுரமாக தாக்கியது. பில்கிஸ் பானுவின் 3 வயது மகள் உள்பட குடும்பத்தில் உள்ள 7 பேரை இந்த கும்பல் கொடூரமாக கொன்றது.
மேலும் இந்த கும்பல் பில்கிஸ் பானுவை கடுமையாக தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக பில்கிஸ் பானு அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் 11 பேர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையை 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008 ஆம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏறத்தாழ 14 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர்களை நன்னடத்தை காரணமாக குஜராத் அரசு விடுதலை செய்தது. இந்த விடுதலை சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 11 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹூவா மொய்த்ரா உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அவசர வழக்காக விசாரிக்கவும், 11 பேர் விடுதலைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க புதிய அமர்வை அமைப்பதாக பில்கிஸ் பானுவுக்கு கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி உறுதி அளித்தனர்.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்னும் இரு நாட்களில் நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கில் சிறை சென்று விடுதலையான சைலேஷ் சிம்மன்லால் பாட் அரசு விழாவில் பாஜக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ வுடன் ஒன்றாக மேடையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
தாஹோட் மாவட்டத்தின் லிம்கேடா தாலுகாவில், கடனா அணையில் லிம்கேடா குழும நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் பைப் லைன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தாஹோத் எம்.பி. ஜஸ்வந்த்சிங் பாபோர் மற்றும் அவரது சகோதரரும் எம்.எல்.ஏவுமான சைலேஷ் பாபோர் உள்ளனர்.
இவர்களுடன் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு குற்றவாளி சைலேஷ் சிம்மன்லால் பாட் ஒன்றாக மேடையில் அமர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, "இந்த அரக்கர்கள் மீண்டும் சிறையில் இருப்பதையும் சாவி தூக்கி எறியப்படுவதையும் நான் பார்க்க விரும்புகிறேன்.
இந்த நீதியின் கேலிக்கூத்தலைப் பாராட்டும் இந்த சாத்தானிய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியா தனது தார்மீக பயணத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் சீக்கிய குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு! என்ன நடந்தது?