புவனேஸ்வர் : நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார்.
தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஏறத்தாழ 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
அதைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக 19 எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக இணைந்து புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
அதேநேரம் ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புக்கு ஆதரவு கரம் நீட்டினர். இந்நிலையில், பிஜு ஜனதா தள தலைவரும், ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயாக், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பிஜு ஜனதா தள தேசிய செய்தி தொடர்பாளர் சஸ்மித் பத்ரா கூறுகையில், இந்திய குடியரசுத் தலைவர் மாநிலத்தின் தலைவர் என்றும் நாடாளுமன்றம், நாட்டின் 1 புள்ளி 4 பில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கூறினார். இவை இரண்டும் இந்திய ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் சின்னங்களாக விளங்குவதாக கூறினார்.
தேசித்தைன் சின்னங்களின் அதிகாரம் மற்றும் அந்தஸ்து எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்திய அரசியலமைப்பின் புனிதம் மற்றும் மரியாதையை பாதிக்கக் கூடிய எந்தவொரு பிரச்சினைக்கும் மேலோங்கி இருக்கக் கூடாது என பிஜு ஜனதா தளம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்றம் திறப்பு குறித்த புனிதமான தருணத்தில் பிஜு ஜனதா தளம் கலந்து கொள்ளும் என்று தெரிவித்தார். இதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் பிஜு ஜனதா தளம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நவீன் பட்நாயக்கை சந்தித்த போதுகூட இரு நண்பர்கள் பேசிக் கொண்டதாகவும், கட்சி குறித்தோ கூட்டணி குறித்தோ எந்தவித கருத்தும் பகிரப்படவில்லை என இருவரும் அறிவித்தனர்.
ஒடிசா முதலமைசர் நவீன் பட்நாயக், பாஜகவுக்கு ஆதரவு கரம் நீட்டி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் தற்போது அது உர்ஜிதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. நவீன் பட்நாயக்கின் திடீர் ஆதரவு குரல் எதிர்க்கட்சிகளிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : டி.கே.சிவகுமார் திடீர் டெல்லி பயணம்.. கட்சிக்குள் விரிசலா?