பெகுசாரை: பிகார் மாநிலம் பெகுசாரை மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்துவரும் பாப்லி குமாரி, குடும்ப பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டு, போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜ்கிர் பயிற்சி மையத்திற்கு செல்வதற்கு முன்பு, பாப்லி குமாரிக்கு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், பெகுசாரை எஸ்பி யோகேந்திர குமார் கலந்து கொண்டு குமாரியை பாராட்டினார். ராஜ்கிர் மையத்தில் பயிற்சியை முடித்த பிறகு, டிஎஸ்பியாக பணியை தொடங்குவார் பாப்லி குமாரி.
எஸ்பி யோகேந்திர குமார் பேசுகையில், "பணியில் இருந்து கொண்டே பெண் காவலர் ஒருவர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. அவர் விரைவில் ராஜ்கிர் மையத்திற்கு பயிற்சிக்கு செல்வார்" என்று கூறினார்.
பாப்லி குமாரி பேசும்போது, "குடும்பத்தின் மூத்த பெண்ணான நான், நிறைய பொறுப்புகளை எடுத்துக் கொண்டேன். அதனால், அரசு வேலை வேண்டும் என முயற்சித்தேன். 2015ல் காவலராக பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு அடுத்தகட்டத்திற்கு செல்வதற்காக மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதன்படி, எனது மூன்றாவது முயற்சியில் நான் வெற்றிபெற்றுவிட்டேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பாஜக எம்எல்ஏ ராஜா சிங்குக்கு எதிராகப்போராட்டம்.. ஹைதராபாத்தில் ஊரடங்கு சட்டம் அமல்..