திருப்பூர்: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர் தாக்கப்படுவதாகப் போலியான வீடியோ வெளியிட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்ற இளைஞர் ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இவரைத் திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் நேற்று (மார்ச் 11) கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் தரப்பில், திருப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து வதந்திகளைப் பரப்பியதற்காகவும், போலியான வீடியோ வெளியிட்டதற்காகவும் ஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் உள்ள ஹெனேகரே கிராமத்தில் வசித்து வரும் பிரசாந்த் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். இவரை மார்ச் 11ஆம் தேதி லதேஹரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இடைக்கால வாரண்டின் அடிப்படையில் திருப்பூர் அழைத்து வந்துள்ளோம். இப்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பேச்சு - சீமான் மீது வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர் தாக்கப்படுவதாகப் போலியான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனிடையே தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ரயில் நிலையங்களில் வட மாநில தொழிலாளர் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காகக் கூட்டமாகக் குவிந்தனர். அங்குப் பலத்த போலீசார் பாதுகாப்பு போட்டப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பதற்றம் நிலவி வருவதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால், வட மாநில தொழிலாளர்கள் தரப்பில் ஹோலி பண்டிகை கொண்டாடவே நாங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்கிறோம். தமிழ்நாட்டில் பாதுகாப்பாகவே இருக்கிறோம் எனத் தெரிவித்தனர். இதனிடையே தமிழ்நாடு அரசு வட மாநில தொழிலாளர் விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்து, அந்த வீடியோ போலியானது என்றும் வீடியோ வெளியிட்ட நபர்களைத் தேடி வருகிறோம் என்று தெரிவித்தது.
இதையடுத்து வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் பொய்யான தகவலைப் பரப்பியதாக வட மாநில ஊடகங்கள் மீதும், பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே பீகார் குழு ஒன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் வெளியான வீடியோ போலியானது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரியவந்தது. இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு போலீசால் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "இந்தியாவை வெறுத்துவிட முடியாது" - பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பான் இளம்பெண் விளக்கம்