சரண்: பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த கள்ளச்சாராயத்தை குடித்து மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 12ஆம் தேதி பிகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மதுரா, இசுவாபூர், அம்னூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 213 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சரண் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மஷ்ராக் காவல் நிலையத்திலிருந்தே கிடைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அழிப்பதற்காக காவல் நிலைய கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள், போலீசாரின் அலட்சியத்தால் காணாமல் போனதாகத் தெரிகிறது. மாயமான இந்த மூலப்பொருட்கள் திருடப்பட்டு, கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்வு