பாட்னா: பிகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார். எட்டாவது முறையாக பிகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் நேற்று (ஆக. 10) மீண்டும் பதவியேற்றார். துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய ஆட்சியில் 16 பாஜக அமைச்சர்கள் இருந்த நிலையில், இந்த அமைச்சரவை இடங்கள் ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கப்படவுள்ளது. குறிப்பாக கடந்த ஆட்சியில் பாஜகவிடம் இருந்த முக்கிய துறைகள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரிக்கும் என்றும், அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட கட்சி என்ற அடிப்படையில் அமைச்சரவையில் அதிக இடங்கள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதனிடையே புதிய துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில பாதுகாப்புக் குழு பரிந்துரையின் பேரில், தேஜஸ்வி யாதவின் பாதுகாப்பு ஒய் பிரிவிலிருந்து, இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு குண்டு துளைக்காத காரும் வழங்கப்பட்டுள்ளது என்றும் மூத்த காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.