மினியாபோலிஸ்: இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையேயான எல்லைப் பிரச்னை குறித்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து அவ்வப்போது போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காசா நகரை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டு வருகின்றன.
பாலஸ்தீனத்தை அடிப்படையாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு இஸ்ரேலில் குண்டு வீச்சுத் தாக்குதலை கடந்த அக்.7 ஆம் தேதி தொடங்கியது. அதன்பின், இஸ்ரேலும் தனது தாக்குதலை தொடங்கப் போவதாக அறிவித்தது. இரு நாடுகளும் ஏறத்தாழ ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி போரிட்டு வருகின்றன. தற்போது வரை இரு நாடுகளும் போரை நிறுத்த வில்லை.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்காவும் தனது ஆதரவை தெரிவித்து இராணுவ உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மினியாபோலிஸ் நடைபெற்ற ஆதரவாளர் கூட்டத்தில் பேசுகையில், ஒரு பெண்மணி எழுந்து நீங்கள் யூத மக்களின் மீது அக்கறைக் கொண்டால் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக! என கத்தினார். அதற்கு அதிபர் உங்களது உணர்ச்சிகளை புரிந்துகொண்டு போரை இடைநிறுத்தம் செய்ய உள்ளதாக கூறினார். இடைநிறுத்தம் என்பது மக்கள் வெளியேற கொடுக்கப்பட்டுள்ள நேரம் என்றும் கூறினார்.
பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் ஆர்ப்பாட்டகாரர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி இருந்தனர். அமெரிக்கா போரை நிறுத்த மறுத்து விட்டது. ஆனால் மனிதாபிமானம் அடிப்படையில் காசா பகுதியில் சிக்கி உள்ள மக்கள் வெளியேற போரை இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேலுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதிக்கு அருகே முகாமிட்டுள்ளதால் காசா பகுதியில் சிக்கி உள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். காசாவை விட்டு வெளியேறிய மக்கள் எகிப்திற்கு சென்றனர். அவர்களுக்கு எகிப்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேலுக்கு புதிதாக அனுப்பப்பட்ட தூதர் ஜாக் லூ மத்திய கிழக்கு பகுதிக்குச் சென்று மனிதாபிமான அடிப்படையில் போரை இடைநிறுத்தம் செய்வதற்கான நிலைமைகளை உருவாக்கும் ஏற்பாடுகளை முன் எடுப்பார் என்றும், பாலஸ்தீன மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் ஈடுபடுவார் என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுமாறு வலியுறுத்திள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இரண்டரை லட்சம் இஸ்ரேலியர்கள் இடம் பெயர்ந்ததாக தகவல்!