ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஜிதேந்திர மேக்வால் என்பவர், கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி, பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மருத்துவமனை ஊழியரான ஜிதேந்திர மேக்வால், கரோனா காலத்தில் துடிப்பாக பணியாற்றியதற்காக, இணைய வாசிகளால் பாராட்டப்பட்டவர். அவர் ஸ்டைலான முருக்கு மீசையுடன் பதிவிட்டிருந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டியிருந்தனர்.
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முருக்கு மீசை வைத்திருந்ததையும், அதற்காக பாராட்டை பெற்றதையும் ஏற்றுக் கொள்ள முடியாத உயர்சாதியைச் சேர்ந்த சிலர், பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வந்து, ஜிதேந்திர மேக்வாலை கொலை செய்ததாக செய்திகள் வெளியாகின.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜிதேந்திர மேக்வால் கொலைக்கு நீதி கோரியும், அவரது குடும்பத்தை சந்திப்பதற்காகவும், பீம் ஆர்மி (Bhim Army) தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) தலைவர் ஜெயந்த் சவுத்ரி இருவரும், பாலி செல்வதற்காக உதய்ப்பூரில் உள்ள தபோக் (Dabok)விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கு, போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அறிந்த இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்களும், விமான நிலையத்திற்கு வெளியே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஜிதேந்திர மேக்வாலின் குடும்பத்தினர், உதய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்து, சந்திரசேகர ஆசாத் மற்றும் ஜெயந்த் சவுத்ரி இருவரையும் சந்தித்து பேசினர். இதையடுத்து, இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்வத்தை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்ட சந்திரசேகர ஆசாத், "முதல்வர் அசோக் கெலாட், தங்களை தடுப்பதற்காக குவித்த போலீசை, ராஜஸ்தானில் நிலவும் சாதியம், நிலப்பிரபுத்துவம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தியிருந்தால், மீசை வைத்தற்காக ஜிதேந்திர மேக்வால் போன்றோர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.