புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை, புதுச்சேரி கமலா அறக்கட்டளை இணைந்து நடத்திய 'கவியரசன் பாரதிக்குக் கவிதை வேள்வி' மற்றும் '105ஆவது சிந்தனை அரங்கம்' ஆகியவை பாரதி உலாவிய புதுச்சேரி குயில் தோப்பில் நடைபெற்றது.
அதில் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற பாரதியின் நூறாவது சிந்தனை அரங்கத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சி குறித்து பாரதிதாசனின் மூத்த பேரனும் கவிஞருமான கோ. செல்வம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
அப்போது, "புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித்துறையை உருவாக்க வேண்டும் என்று ஆளுநர், கலை பண்பாட்டுத் துறையினரிடம் மனு அளித்துள்ளோம். வடமாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு பணிபுரிய வரும் அலுவலர்களுக்குத் தமிழ் தெரியவில்லை.
இப்பகுதியில் உள்ள தமிழ் மக்களிடம், தமிழ் தெரியாத அலுவலர்களால் பல பிரச்னைகள் உருவாகிறது. எனவே, அவர்கள் தமிழ் கட்டாயம் பயில வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தோம்.
புதுச்சேரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக கலைமாமணி விருது, ஆறு ஆண்டுகளாக தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்படவில்லை. இதனால், தமிழ் அறிஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்களின் படைப்புகள், புத்தகங்கள் வெளிவர அரசு நிதியுதவி அளித்துவந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அது தொடரவில்லை. எனவே, அரசு மீண்டும் நிதி வழங்கி உதவ வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனம் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்கள் தமிழ் மொழியில் கையெழுத்துப் போட முயல வேண்டும். தமிழில் பிள்ளைகளுக்குப் பெயர் வையுங்கள்.
புதுச்சேரியில் கட்டாயம் தமிழ்ப்படித்தால் தான் வேலைவாய்ப்பு என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். புதுச்சேரிக்குத் தனி கல்வி வாரியம் வேண்டும். மத்திய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் மகாகவி பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி, அதனை வலியுறுத்தி மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Storming Operation - தமிழ்நாட்டில் இதுவரை 3,325 பேர் அதிரடி கைது