கரோனா வைரஸால் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும், சூட்டெறிக்கும் வெயிலானது மக்களை வீடுகளில் வாட்டி வதைக்கிறது. குளிர்சாதன வசதி இல்லையென்றால் மக்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கு சிரமம் தான். அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் கான்பூர், லக்னோ பகுதிகளில் செயல்படும் வனவிலங்கு பூங்காக்களில் வசிக்கும் விலங்குகளை வெயிலிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் காப்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இது குறித்து கான்பூர் வனவிலங்கு காப்பாளர் திலீப் குப்தா கூறுகையில், "பகல் நேரத்தில் வெப்பம் அதிகளவில் காணப்படுகிறது. வெப்ப அலைகளிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 'கார்னிவோர்ஸ்' (carnivores) வகைகளுக்கு ஏர் கூலர் வசதியும், பறவைகளுக்கு வைக்கோல் திரைச்சீலைகள், ஹெர்பிவோர்ஸ் (herbivores) வகைகளுக்கு மழை துளிகள் பாய்வது போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய லக்னோ உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர் ஆர்.கே.சிங், "உடலில் நீரிழப்பை தவிர்ப்பதற்காகவும், ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காகவும் விலங்குகள் குடிக்கும் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் (electrolytes), மினரல் (minerals), வைட்டமின் ஏ.டி.எச் (vitamin ADH) ஆகியவற்றைச் சேர்க்கத் தொடங்கியுள்ளோம். கடுமையான வெப்பத்தால் நீர் வெப்பம் அடைவதால் அவ்வப்போது மாற்றி வருகிறோம். கரடி உட்பட சில விலங்குகளுக்கு தர்ப்பூசனி, வெள்ளரி போன்ற பழங்கள் வழங்கப்படுகின்றன" என்றார்.
இதையும் படிங்க: பச்சை மஞ்சள் கருமுட்டை: கேரள கோழியால் வியந்த விஞ்ஞானிகள்!