வங்கதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸிடம் வங்கதேச அரசு மேற்கொண்ட விசாரணையில் மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது என தெரியவந்தது.
ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு வலியுறுத்தியது. வங்கதேசம் அளித்த தகவலை அடிப்படையாக வைத்து தேசியப் புலனாய்வு முகமை, இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தடைசெய்தது. தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதாகவும், போதனைகள் மூலம் வெவ்வேறு சமயத்தினர் இடையே பகைமை உணர்வைத் தூண்ட முயற்சி செய்ததாகவும் தேசியப் புலனாய்வு முகமை குற்றஞ்சாட்டியது.
வெளிநாடு தப்பியோடிய நாயக்கை தொடர்ந்து கவனித்து வந்த இந்திய அரசு, அவர் வளைகுடா நாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதை தற்போது உறுதி செய்துள்ளது. கத்தார் நாட்டின் முக்கிய தொழிலதிபரும், நெருங்கிய கூட்டாளியுமான அப்துல்லா அலி அல் இமாடி என்பவரிடம் 5 லட்சம் அமெரிக்க டாலரை நிதியாக வழங்க வேண்டுமென இந்திய புலனாய்வு முகாமை உறுதி செய்துள்ளது.
கத்தார், ஐக்கிய அரபு உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாயக் தொடர்ந்து பல வங்கிக் கணக்குகளை பராமரித்து வருகிறார். இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை, அதனோடு தொடர்புடைய அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக நிதியைப் பெற அவர் இந்த கணக்குகளைப் பயன்படுத்துகிறார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, கருப்புப் பண மோசடி ஆகிய தீவிரவாத நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபடுவதைக் கருத்தில் கொண்ட இந்திய நுண்புலனாய்வு அலுவலர்கள், மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அவர் மீது பதிவுசெய்தது. இவரை இந்தியாவிற்கு கொண்டு வர, மத்திய அரசு இண்டர்போலிடம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: இந்தியாவின் மூத்த உயர் அலுவலருக்கு பாகிஸ்தான் சம்மன்