மும்பையில் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பை இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் நடத்திவந்தார். இந்த அமைப்பு பணமோசடி, வெறுப்புணர்வை தூண்டுவது உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜாகிர் நாயக் இந்திய அரசால் தேடப்பட்டார். ஆனால் விசாரணைக்கு அஞ்சி ஜாகிர் மலேசியாவுக்கு பறந்துவிட்டார்.
இந்திய அரசாங்கம் ஜாகிரை திரும்ப அனுப்பும்படி மலேசிய அரசிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் முறையாக நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் எதுவும் இல்லாமல் அவரை திரும்ப அனுப்ப இயலாது என மலேசிய அரசாங்கம் தெரிவித்தது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசி மலேசிய அரசாங்கத்திடம் மேடைகளில் உரையாற்றத் தடை வாங்கியுள்ளார் ஜாகிர்.
சில நாட்களுக்கு முன்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவரை மலேசியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதற்கு ஜாகிர் நாயக், சீனர்கள்தான் மலேசியாவின் பழமையான விருந்தாளிகள். அவர்கள்தான் வெளியேற வேண்டும் என பதில் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை விட மலேசியாவில் இருக்கும் இந்துக்கள் அதிகமான உரிமைகளை அனுபவிக்கிறார்கள் என பேசியது பலர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மலேசிய பிரதமர் மஹாதிர் பேசுகையில், இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு அவர் இனவாத அரசியலில் ஈடுபட விரும்புகிறார் என்பதை தெளிவாக்குகிறது. அவரால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து காவல்துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் மலேசியாவில் இருக்கும் ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது. மேலும் ஜாகிர் நாயக் உரையாற்றுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.