ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவுக்கும் கடும் மோதல் நிலவி வருகிறது. ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள் உருவாக்குவேன் என்ற அறிவிப்புக்கு எதிராக, சந்திரபாபு நாயுடு கடுமையானப் போராட்டங்களை மேற்கொண்டார்.
இந்நிலையில், 'பிரஜை சைதன்ய யாத்ரா' என்ற மக்களுக்கானச் சக்தியைத் தரும் நடைப்பயணம் என்னும் பொருள்படும் மேற்கொள்ள சந்திரபாபு நாயுடு நேற்று விசாகப்பட்டினம் வந்தார். விமானநிலையத்தில் வந்திறங்கிய அவரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவுடிகள் காலணிகளைக் கொண்டு தாக்கினர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதுகுறித்து அவர், 'காவல் துறையிடம் அனுமதியைப் பெற்று விசாகப்பட்டினம் வந்துள்ளேன். புலிவெந்துலா, விஜயவாடாவிலிருந்து வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ரவுடிகள் என்னை வழிமறித்து காலணி, தண்ணீர் பாக்கெட்களை வீசி, எனது வாகனத்தைத் தாக்கினர். எனக்கு z+ பாதுகாப்பு இருந்தும் காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற காவல்துறை தவறிவிட்டது' எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது 40 ஆண்டு கால பொது வாழ்வில் இதுபோன்ற சம்பவத்தைக் கண்டதில்லை எனத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு, எனது ஆட்சிகாலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவாரன ஜெகன்மோகன் ரெட்டிக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்தேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்ட அலுவலர்கள் பாலியல் புகாரில் சிக்கினால் கட்டாய ஓய்வு!