சில நாள்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி ரகு ராம கிருஷ்ண ராஜூ, கட்சிக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தார். மூன்று தலைநகர், அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி உள்ளிட்ட கட்சியின் முடிவுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார்.
இதையடுத்து அவர் கட்சியின் கொள்கைகளை மீறியதாகக் கூறி, அதற்கு விளக்கம் கேட்டு கட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. மேலும், இந்த மாதத்தின் தொடக்கத்தில் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரான விஜய்சாய் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும், ராஜூவை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்தனர்.
இச்சூழலில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவையும், பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ்வையும் ராஜூ சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவிவருகிறது. ராஜூ 2018ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தாலும், அதற்கு முன்னர் அவர் பாஜகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜஸ்தான் களேபரம்; அம்பலமான பாஜகவின் ஜனநாயக விரோத செயல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!