ஆந்திர மாநிலம், அரிலோவா பகுதியில் ஒரு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்வதற்காக, விசாகப்பட்டினம் கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ ராமகிருஷ்ணா பாபு, தனது கட்சி உறுப்பினர்களுடன் இன்று (ஜூன் 15) வருகை தந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர், எம்.எல்.ஏ-வை கற்களைக் கொண்டுத் தாக்கியுள்ளனர். இதில் சில தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்கள் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து எம்.எல்.ஏ ராமகிருஷ்ணா பாபு கூறுகையில், "தாக்குதல் நடத்தியவர்களுக்கு அரிலோவா பகுதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவர்கள் கட்சியினர் கிடையாது. ஆனால், எங்களைத் தாக்கியது ஒய்எஸ்ஆர்சிபி-யின் ரவுடிகள் தான். அவர்கள் பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டனர். இந்தத் தாக்குதலில் உள்ளூர் வார்டு செயலாளர் உட்பட சிலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் காவல் துறையினருக்கு முன்பாகவே தான் நடைபெற்றது. ஆனால், தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது" என்றார்.
இது தொடர்பாக பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்தை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடினார்.
அப்போது, 'சட்டமன்ற உறுப்பினருக்கே போதுமான பாதுகாப்பு இல்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்த கட்சி உறுப்பினர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி வழங்க வேண்டும்' என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.