இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மனைவி மெலனியாவுடன் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களுடன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதில் பங்கேற்றிருந்த ரிலைன்ஸ் இண்டர்ட்டிரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, "அமெரிக்காவின் ஆற்றல் துறையில் இதுவரை 700 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளோம்" என்றார்.
இதற்கு ட்ரம்ப், '700 கோடி டாலரா! பெரிய முதலீடுதான்' எனக் கூறி பாராட்டுத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "4ஜி தொலைத்தொடர்பு சேவையை இந்தியாவில் சிறப்பாகச் செயல்படுத்தினீர்கள். 5ஜி சேவையை மேற்கொள்ள திட்டம் உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அம்பானி, "ஆம், சீனத் தயாரிப்பாளர்களின் கருவிகள் ஏதுமின்றி 5ஜி தொழில்நுட்ப சேவை வழங்கவதற்கு பணியை மேற்கொண்டுவருகிறோம். ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர வேறெந்த நிறுவனமும் இப்படிச் செய்ததில்லை.
அமெரிக்காவில் இந்திய வணிகர்கள் முதலீடு செய்துவருகிறோம். அவை மிகவும் விரைவில் ஒப்புக்கொள்ளப்படுகின்றன, அது தொடரும் என நம்புகிறேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய ட்ரம்ப், "நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரைதான் இதெல்லாம் நடக்கும். தவறான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டால், நடக்க வாய்ப்பில்லை. எல்லாம் ஒரே கணத்தில் நின்றுவிடும். உங்களது வேலையின்மை விகிதம் 8 அல்லது 10 விழுக்காட்டை எட்டுவும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 35 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ரஜினி - கமல்?