கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள இருப்பு தெற்கிருப்பு காலனியைச் சேர்ந்த தவிடன் என்பவரின் மகன் பழனிவேல் (28). இவர் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அவ்வப்போது சென்றுவருவது வழக்கம். அப்போது அவர் அந்த வீட்டிலிருந்த 16 வயது சிறுமியிடம் பேசி பழகி வந்துள்ளார்.
அச்சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அருகே உள்ள செங்கல்சூளையில் தங்கியிருந்து வேலை பார்த்துவந்தனர். இதனால் அவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பழனிவேல், கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதியன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதன் பின்னர் நடந்த சம்பவத்தை சிறுமி அவரது பெற்றோரிடம் கூறினார்.
இதனையடுத்து சிறுமியின் தாயார் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பழனிவேல் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், பழனிவேலுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள்: 'தரமற்ற சாலை' - ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!