சந்திராபூர் (மகாராஷ்டிரா): கரோனா ஊரடங்கு விளைவாக பெரிய ஐடி நிறுவனத்தில் வேலையிழந்த பொறியாளர், மன அழுத்தத்தை போக்க புதிய தொழில் முனைவராக மாறியிருக்கிறார்.
நூற்றுக்கணக்கான பெருநிறுவனங்கள் கரோனா ஊரடங்கினால் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பினர். இது பெருவாரியான குடும்பங்களை நிலைகுலையச் செய்தது. பலர் இதற்கான தீர்வாக தங்கள் உயிரை விலையாகக் கொடுத்தனர்.
ஆனால் இது எல்லாம் அடித்து தூளாக்கி இருக்கிறார் பாலஸ் ஜெயின். நாசிக் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவர், அவுரங்காபாத்தில் ஒரு பெரும் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். இச்சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்தார்.
இதில் பெரும் இழப்பை சந்தித்த பெருநிறுவனங்கள் அந்த இழப்பை ஈடுகட்ட தங்கள் ஊழியர்களை பலிகேடாக்கியது. இதில் சிக்கிய அவர்களில் ஒருவர்தான் பாலஸ். ஆனால், தன்னை நிறுவனம் கைவிட்டதை நினைத்து சற்றும் வருந்தாமல், வீட்டில் முடங்கிக் கிடக்காமல் சுய தொழிலை தொடங்க பாலஸ் திட்டமிட்டார்.
அதன்படி ஒரு சிற்றுண்டி கடை அமைத்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். இது குறித்து பேசிய பாலஸ், “வீட்டில் நான் மட்டும் தான் வேலைக்கு செல்கிறேன். என் ஊதியத்தில் தான் என் குடும்ப உறுப்பினர்களின் செலவுகள் நகர்கிறது. வேலையிழந்த நேரத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால், எப்படியேனும் வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தொழிலை தொடங்கி நடத்தி வருகிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தினமும் 50 முதல் 60 தட்டுக்கள் வரை இட்லி விற்கிறேன். 600 முதல் 700 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இந்த தொழில் சந்தோஷத்தை அளிக்கவில்லை எனினும், மனம் நிம்மதியாக இருக்கிறது என்றார் பாலஸ்.
எந்த நெருக்கடிகள் வந்தாலும் மனதளவில் தளர்ந்து விடாமல் வாழ்வை முன்னேற்ற பாதையில் செலுத்த நினைப்போருக்கு பாலஸ் ஒரு முன்னோடி.