கீதா என்ற மாற்றுத்திறனாளி பெண், தனது குழந்தைப் பருவத்தில், சம்ஜஹவுதா எக்ஸ்பிரஸில் தவறுதலாக பாகிஸ்தான் சென்றடைந்தார். பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள் லாகூர் ரயில் நிலையத்தில் கீதாவை மீட்டனர்.
அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மறைந்த அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மேற்கொண்ட தொடர் முயற்சியால், அக்டோபர் 26, 2015 இல் கீதா மீண்டும் இந்தியா திரும்பினார். அப்போதிருந்து, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சமூக அமைப்பின் உதவிமூலம் வசித்துவரும் கீதா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது குடும்பத்தைத் தேடிவருகிறார்.
மத்தியப் பிரதேச சமூக நீதி மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத் துறையின் அலுவலர் ஒருவர் கூறுகையில், இந்தூரைச் சேர்ந்த ஆனந்த் சேவா சொசைட்டி என்ற அமைப்பு கீதாவை கவனித்துக்கொள்கிறது. அவரது குடும்பத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு இந்தூரில் உள்ள ஆனந்த் சேவா சொசைட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"கீதா சிறுவயதில் வசித்த தனது சொந்த இடத்தைப் பற்றி சைகைகள் மூலம் சில தகவல்களை வழங்கியுள்ளார். அதன்படி, அவரது வீடு மகாராஷ்டிரா அல்லது தெலங்கானாவில் இருக்க வாய்ப்புள்ளது.
கீதா தெரிவித்த குறியீடுகளின் அடிப்படையில் கரும்பு, அரிசி, கிராம் ஆகியவை அவரது சொந்த கிராமத்தில் பயிரிடப்படும் முக்கியப் பயிர்கள் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தீவிர ரசிகராக கீதா இருக்கிறார். வீட்டில் இட்லி, தோசை போன்ற தெற்கு உணவுகள் உண்கிறார்.
இதன் அடிப்படையில் மகாராஷ்டிரா, தெலங்கானாவுக்குச் சென்று அவரது குடும்பத்தைத் தேடிவருகிறோம்" என்று குறியீடு மொழி வல்லுநர் ஞானேந்திர புரோஹித் தெரிவித்தார்.
கீதா தனது கிராமத்திற்கு அருகில் ஒரு ரயில் நிலையம், ஆற்றின் கரையில் ஒரு கோயில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நந்தேத், பர்பானி, ஜல்னா ரயில் நிலைய பகுதிகளுக்கு கீதா அழைத்துச்செல்லப்படவுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 குடும்பங்கள் கீதா தனது மகள் என்று உரிமை கோரினர். ஆனால், விசாரணையில் ஒரு கூற்றுகூட உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில், கீதாவின் குடும்பத்தைத் தேட மகாராஷ்டிரா காவல் துறையினர் முன்வந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் மராத்வாடாவில் இருந்து காணாமல்போன மாற்றுதிறனாளி சிறுமிகளுக்கான பதிவுகளை காவல் துறையினர் தேடிவருவதாக அவுரங்காபாத்தில் உள்ள மூத்த காவல் ஆய்வாளர் கிரண் பாட்டீல் தெரிவித்தார்.
அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க ஒரு தேடல் குழு நந்தேடிற்கு சென்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஞானேந்திர புரோஹித், சுமித்ரா முவேல், மாநில காது கேளாத அமைப்பின் அலுவலக பொறுப்பாளர் மனோஜ் பட்வாரி மற்றும் உள்ளூர் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் பி.டி. பாரதி ஆகியோர் கீதாவின் குடும்பத்தைத் தேடும் பணியில் அயராது உழைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க: செட்டில் நாங்கள் இருவர்: தாய்மையை போற்றும் கரீனாவின் கர்ப்ப செல்ஃபி!