உள்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதித்ததை தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அரசின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை (ஏப்.30), பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான செயல் திட்டத்தை வகுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதேபோல் திரும்ப அழைத்து வரப்படும் ஆறு லட்சம் தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட தங்குமிடமும் சமூக சமையலறைகளையும் ஏற்பாடு செய்யுமாறு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி முழு ஊரடங்கின் காரணமாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான செயல் திட்டத்தை வகுக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை உத்தரப்பிரதேச அரசு மற்ற மாநில அரசுகளிடம் கேட்கும்.
மற்ற மாநிலங்களில் குடியேறிய தொழிலாளர்களின் பெயர், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளையும் அரசு கோரியுள்ளது” என்றார்.
மேலும், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் நடந்து வர முயற்சிக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நீங்கள் இதுவரை பொறுமை காத்தது போல் இன்னும் சற்று பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நடந்து வர முயற்சிக்க வேண்டாம். நீங்கள் மீண்டும் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு மாநில அரசாங்கங்களை விரைவில் தொடர்புகொள்வோம்' என்றார்.
உத்தரப்பிரதேச அரசு ஏற்கனவே மார்ச் மாதம் கடைசி வாரத்தில் டெல்லியில் இருந்து நான்கு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை திரும்ப அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான்கு லட்சம் மலையாளிகள் கேரளா திரும்ப விருப்பம்!