இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தொழில்துறை மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தொழில்துறைக்கு உதவும் வகையில் உத்தரப்பிரதேச அரசு, சில தொழில்துறை பிரிவுகளுக்கு தொழில் நடவடிக்கைகளை மறுபடியும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.
மேலும், மூன்று மாதங்களுக்கு மாநிலத்தின் தொழில்துறை, வணிக நிறுவனங்களின் நிலுவைத் தொகை மீதான வட்டியை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளது. இதனை அம்மாநில தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் சதீஷ் மகானா உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி முதன்மை செயலாளர் அலோக் குமார், நொய்டா, பெருநகர நொய்டா, யமுனா அதிவேக நெடுஞ்சாலை, உத்தரப்பிரதேச தொழில்துறை மேம்பாடு (யு.பி.எஸ்.ஐ.டி.ஏ), கோரக்பூர் தொழில்துறை வளர்ச்சி ஆணையம், சதாரியா தொழில்துறை வளர்ச்சி ஆணையம் மற்றும் ஒருங்கிணைந்த தொழில்துறை டவுன்ஷிப் கிரேட்டர் நொய்டா லிமிடெட் ஆகியவற்றுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தொழில்துறை, வணிக நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டிய அனைத்து வகையான நிலுவைத் தொகைகளையும் தாமதமாக செலுத்துவதற்கான வட்டி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தும் அலகுகளுக்கு கிடைக்கும்.
விலக்கு பெற, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆன்லைனில் அல்லது மின்னஞ்சல் மூலம் தொழில்துறை வளர்ச்சி ஆணையத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் வழிமுறைகளை வெளியிடுங்கள்'