ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் - பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று வழங்கியது.
இந்நிலையில், தேசிய அளவியல் மாநாட்டில் இன்று கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகிலேயே இந்தியாவில்தான் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார். அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரைப் பாராட்டிய மோடி, நாடு அவர்களால் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார்.
தேசிய அளவியல் மாநாட்டில் அறிவியலாளர்களிடம் உரையாற்றிய நரேந்திர மோடி, "இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உலகளாவிய சந்தையும் ஏற்பும் உள்ளது. அளவைப் போன்று தரமும் மிக முக்கியம். தற்சார்பு இந்தியா என்ற பாதையில் சந்தைக்கு ஏற்ப நம் தரத்தை உயர்த்த வேண்டும்.
முற்போக்கான சமூகத்தில் ஆராய்ச்சியும் அதன் பலனும் மிக முக்கியம். அதன் தாக்கம் சமூகம் மற்றும் வர்த்தக ரீதியாக இருக்க வேண்டும். அணுகுமுறையையும் யோசிக்கும் திறனையும் விசாலமாக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்தியப் பொருள்களால் நிரப்புவதில் விருப்பமில்லை. ஆனால், உலகின் அனைத்து திசைகளிலும் இந்தியப் பொருள்களால் வாடிக்கையாளர்கள் அனைவரின் மனத்தையும் வெல்ல வேண்டும்" என்றார்.