ஹரியானா மாநிலம், கடர்பூர் கிராமத்தில் உள்ள மத்திய ஆயுத காவல் படை ( Central Armed Police Forces (CAPF) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force) ஆகியவற்றின் பயிற்சி அகாடமியில் மாபெரும் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
இதுகுறித்து அமித் ஷா கூறுகையில், 'இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். இந்த நாடு கரோனா தொற்றை எவ்வாறு சமாளிக்கப் போகிறது, என்று உலகமே உற்று நோக்கியது. தற்போது நாம் சமாளிக்கும் விதத்தைக் கண்டு உலகமே ஆச்சரியத்தில் உள்ளது.
கரோனா தொற்றுக்கு எதிரானப் போரில் இந்திய பாதுகாப்புப் படைகளின் பங்கு முக்கியமானதாகும். அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது மட்டுமல்லாமல், மக்களோடு சேர்ந்து கரோனா தொற்றையும் எதிர்த்துப் போராடுகிறார்கள்.
இப்போராட்டத்தில் பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தோடு நான் பேசினேன். அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். கரோனா தொற்று குறித்து வரலாற்றில் எழுதப்படும் பொழுது நமது வீரர்களின் பங்களிப்பு தங்க மை கொண்டு எழுதப்படும்.
இந்நிலையில் தற்போது நடப்படும் மரங்கள் அனைத்தும் பல ஆண்டுகள் வாழக் கூடியவையாகும். இந்த மரங்கள் முதிர்ச்சி அடையும் வரை, இதனை வீரர்கள் சரியாகப் பராமரிக்க வேண்டும்' எனக் கூறினார்.
மேலும் மத்திய ஆயுத காவல் படையினர் சேர்ந்து நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு வைத்துள்ளனர். குருகிராமில் நடைபெற்ற நிகழ்வில் அனைத்து மத்திய ஆயுத காவல் படைத் தலைவர்களும், அவர்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.