இந்த உலகமே எரிபொருளால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த எரிபொருட்கள் அனைத்துமே சுற்றுச்சூழல் மாசுப்படுத்துபவை. பல்வேறு முறையில் , நாம் எரிபொருட்களை உருவாக்கிக் கொள்கிறோம். நம் மனித வாழ்வுக்கு ஆபத்தை விளைவிக்கின்ற விஷயமாக இருந்தாலும், இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே போனாலும், நாம் அதை பொருட்படுத்துவதில்லை. இந்த நேரத்தில் இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாத தூய எரிபொருளை கண்டுபிடிப்பது உடனடி தேவையாக உள்ளது.
இன்னும் 10 வருட காலத்துக்குள் நாம் மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம். பூமிக்கு அடியில் உள்ள இயற்கை வளங்களைச் சுரண்டி அதை எரிபொருளாக மாற்றுவது பிரித்தெடுப்பது எல்லாமே உலகத்தில் 'குளோபல் வார்மிங் ' உருவாக காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை. பெரிய சுற்றுச்சூழல் கேடு எரிபொருட்களால் உலகில் ஏற்பட்டுள்ளது. இன்றைய வெளிச்சத்துக்காக நம் எதிர்காலத்தை இருட்டுக்குள் தள்ளுகிறோம் என்பதே உண்மை.
எரிபொருட்கள் வெளியிடும் கார்பனால் இந்த பூமிப் பந்து பெரிய புதை குழியாக மாறி வருகிறது. இந்த பிரச்னையை எதிர்கொள்ள சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தூய எரிபொருளை கண்டுபிடிப்பதே ஒரே தீர்வு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், தூய்மையான எரிபொருளை தயாரிப்பதில் மிகுந்த சவால்கள் உள்ளன.
நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் விளைவிக்கும் தீமைகள் அளவிட முடியாதது. இந்த உலகம் முழுவதும் நிலக்கரி, பெட்ரோல், எரிவாயு போன்ற எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக ஆண்டுக்கு 5,500 கோடி டன் கார்பன் பூமியில் வெளியிடப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு, இவை ஏற்படுத்தும் பாதிப்புகளை பட்டியலிட்டால் பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது.
வெளியிடப்படும் கார்பனால் பூமியில் வெப்பத்தின் அளவு ஒரு டிகிரி உயரும். கடல் நீர் மட்டம் 10 செ.மீ. வரை உயர வாய்ப்புள்ளது. இதனால், பூமியில் கடற்கரை பகுதியில் வசிக்கும் 2.1 கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழப்பார்கள். அதோடு, ஒரு ஹெக்டேர் நிலத்தில் விளையும் கோதுமையில் 3 சதவிகிதமும் அரிசியில் 4 சதவிகித விளைச்சலும் குறையும். இது வருங்காலத்தில் உணவு பொருள் தட்டுப்பாட்டுக்கு வழி வகுக்கும். பூமியில் மனிதனின் உடலை நல்லபடியாக வாழவைக்க உதவும் நல்ல பாக்டீரியாக்களில் 5 சதவிகிதம் காணாமல் போகும். இதன் காரணமாக, உலகில் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படலாம். உலகில் குடிநீர் தட்டுப்பாடு 4 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதமாக உயரும். மக்கள் தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கலாம்.
இந்த பிரச்னைகளை தீர்க்க நாம் என்ன செய்யப் போகிறோம்? பூமியில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிபொருட்கள் எடுப்பது குறைய வேண்டும். பெட்ரோல் போன்ற எரிபொருட்களை பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும். இதனால், இயற்கை எரிவளங்கள் பாதுகாக்கப்படும். மாற்று எரிபொருள்களை கண்டுபிடிப்பதற்கு அரசுகள் அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டும். தொடர்ச்சியாக, ஆராய்ச்சிகள் நடத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிபொருளை கண்டுபிடிக்க முனைய வேண்டும். சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரத் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் அக்கறை காட்டும் நிறுவனங்களுக்கு அதிக மானியம் வழங்கலாம்.
மக்கள் தங்கள் வீட்டுக் கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை பொருத்த அறிவுறுத்தலாம். வீட்டுக்கு வீடு சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்படுவதை அரசு ஊக்கப்படுத்துவதும் அவசியம். வீட்டு தேவை போக அதிக மின்சாரம் உற்பத்தியானால், மின்வாரியங்களுக்கு வழங்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதேபோல், பேட்டரியில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்கப்படுத்தலாம். இந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், அடுத்த ஐந்தே ஆண்டுகளில் உலகில் பல அற்புதமான மாற்றங்கள் நிகழும்.
அதாவது 2025ஆம் ஆண்டு ஹைதராபாத் மாகேஷ்வரத்தில் வசிக்கும் சுனிதா-ராஜேந்திரா குடும்பத்தினர் அரசிடம் இருந்து மின்சாரம் வாங்க மாட்டார்கள். மாறாக தங்கள் வீட்டுக் கூரைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்துக்கு வழங்குவார்கள். இவர்கள் வீட்டில் பல்ப் முதல் கார் வரை மின்சாரத்தில் இயங்கும். மின்சார உற்பத்தியால், அரசிடமிருந்து இவர்கள் குடும்பத்துக்கு பணம் கிடைக்கும். இதனால், சுனிதா குடும்பத்தினரின் பொருளாதாரம் உயரும்.
2030ஆம் ஆண்டு கர்னுல் மாவட்டம் அதோனியில் வசிக்கும் விவசாயி ஒருவர் பெங்களூருவுக்கு தன் மகன் வீட்டுக்கு செல்லும் போது அரிசி, பருப்பு, காய்கறி வகைகளுடன் 20 கிலோ வாட் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியையும் எடுத்துச் செல்வார். திரும்பி ஊருக்கு செல்கையில், மகன் வீட்டில் இருந்து சார்ஜ் காலியான பேட்டரியை எடுத்துக் கொண்டு போவார்.
2035ஆம் ஆண்டு டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா நகரங்களில் ஓடும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் அனைத்துமே பேட்டரியால் இயக்கப்படும். இதனால், சாலைகளில் புகை கக்கும் வாகனங்கள் இருக்காது. எரிபொருள் இல்லாத வாகனங்களால் மக்களுக்கு எளிதான நல்ல காற்று கிடைக்கும். மக்கள் நல்ல காற்றை சுவாசிக்கத் தொடங்குவார்கள். இதனால், காற்று மாசு காரணமாக ஏற்படும் நோய்கள் காணாமல் போய் விடும்.
எந்தெந்த வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று பார்ப்போம்...
சூரிய மின்சாரம்: ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் போன்ற நாடுகள் எரிபொருள்களில் இருந்து எடுக்கப்படும் மின்சாரத்தை விட அதிகளவு சூரிய ஒளி மின்சாரத்தையே உற்பத்தி செய்கின்றன. இந்த நாடுகளில் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு மேலும் மேலும் முதலீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை உதாரணமாக கொண்டு இந்தியாவும் 2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருள் மின்சார உற்பத்தியை 30 சதவிகிதம் குறைக்க வேண்டும். 2070ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாக இதை உயர்த்திக் காட்ட வேண்டும். அதற்கேற்ற இலக்குகளை திட்டமிட்டு இந்திய அரசு இயங்குவது நல்லது.
காற்றாலை மின்சாரம்: 98 சதவிகித காற்றாலை மின்சாரம் சுத்தமானது. இதன் தயாரிப்பு செலவும் மிக குறைவு. ஒரு முறை காற்றாலையை நிர்மானித்து விட்டால் பராமரிப்புச் செலவும் வெகு குறைவு. இதன் விளைவாக ஒவ்வோரு ஆண்டும் உலகம் முழுக்க காற்றாலை மின்சார உற்பத்தி 3 சதவிகிதம் உயர்ந்து வருகிறது. இந்த விஷயத்தில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளுக்கு அடுத்தபடியாக 5ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தி இலக்கு 175 ஜிகாவாட்ஸ் என நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதில் சூரிய ஒளி மின்சாரம் 100 சதவிகிதம் காற்றாலை மின்சாரம் 60 சதவிகிதம் சாண வாயு மின்சாரம் 10 சதவிகிதம் சிறிய மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக 5 சதவிகிதம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். (1000 மெகாவாட் ஒரு ஜிகாவாட் , 1000 ஜிகாவாட் ஒரு டெரா வாட்)
தண்ணீர் மின்சாரம் : உலகின் தண்ணீரில் இருந்து ஆண்டுக்கு 2,700 டெரா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சார உற்பத்தியில் தண்ணீரின் பங்கு மிக அதிகம். உலகில் 66 நாடுகளில் தங்களுக்குத் தேவையான 50 சதவிகித மின்சாரத்தை தண்ணீரில் இருந்தே எடுக்கின்றன. 24 நாடுகளில் 90 சதவிகித மின்சாரம் தண்ணீரில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 34 சதவிகித மின்சாரம் தண்ணீரில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் பல்வேறு அணைகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 85,000 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.
அணு உலை மின்சாரம்: ஆண்டுக்கு 7, 000 டன் யுரேனியம் பயன்படுத்தி உலகம் முழுக்க பல நாடுகளில் அணுஉலை மின்சார உற்பத்தி நடைபெறுகிறது. உலகம் முழுக்க 444 அணுஉலைகள் இயங்கி வருகின்றன. 66 அணுஉலைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் 22 அணுஉலைகள் வழியாக ஆண்டுக்கு 7 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் இதை 20 ஜிகாவாட்டாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அணுபிணைப்பு மின்சாரம்: அணுக்கருவை பிளப்பதன் மூலம் மின்சாரம் கிடைப்பதை போன்று ஹைட்ரஜனை பிணைக்க வைப்பதாலும் அதிகளவில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 2030ஆம் ஆண்டு இந்த ஆய்வு முற்று பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றுவிட்டால், ஆண்டுக்கு 867 டன் ஹைட்ரஜன் கொண்டு உலகம் முழுக்க தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து விட முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 'நான் சிரித்தால்' குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்