புதுச்சேரி முதலியார்பேட்டை அருகே பிரெஞ்சு ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட ஏஎஃப்டி பஞ்சாலை செயல்பட்டு வந்தது. புதுச்சேரி அரசு சார்பில் செயல்பட்டு வந்த இந்த பஞ்சாலையில், சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில், தொழிற்சாலையில் பல நிர்வாக சீர்கேடுகள் நடைபெற்றதால், கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாலையை நிரந்தரமாக மூடுவதாக அரசு அறிவித்தது. இருப்பினும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆகஸ்ட் 13ஆம் தேதி புதுச்சேரி அரசு அறிவித்தது.
இதையடுத்து ஆலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர், தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, நேற்று (ஆகஸ்ட் 17) புதுச்சேரி பஞ்சாலைத் தொழிலாளர் சங்க செயலாளர் அபிஷேகம் தலைமையில், பஞ்சாலைத் தொழிலாளர்கள் புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேகம், தொழிலாளர் விரோத போக்கை மேற்கொள்ளும் துணைநிலை ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பஞ்சாலை தொழிலாளருக்கு 18 மாதங்களாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும், ஏஎஃப்டி பஞ்சாலையைத் தொடர்ந்து நடத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருநர் சமூகத்துக்கு பேருந்தில் இட ஒதுக்கீடு அளிக்கும் மேற்கு வங்கம்!