ஹிமாச்சல பிரதேசம் குல்லுவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பழைய சூழலுக்கு மாறியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து வணிக வளாகங்களும், அலுவலகங்களும் மூடப்பட்டன. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வீடுகளில் இருந்தவாறே பணி செய்ய வலியுறுத்தப்பட்டனர்.
இச்சூழலில் கரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் குல்லுவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை ஹாயாக ரசித்துக் கொண்டே அவர்களின் அலுவலக வேலையை செய்து வருகின்றனர்.
குல்லுவில் தீர்த்தன் பள்ளத்தாக்கில் தங்கியுள்ள 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதில் அவர்கள் அனைவரும் இப்பகுதியில் தங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது.
இதுகுறித்து உள்ளூர்வாசிகளிடம் கேட்கையில், ''தீர்த்தன் பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக உயர்ந்துள்ளதால், பழைய சூழலுக்கு திரும்புகிறது. இதனால் இந்த மாதத்தில் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என பார்க்கப்படுகிறது.
ஆனால் சுற்றுலாவின் வணிகம் மீண்டும் பழைய சூழலுக்கு வர இன்னும் நாள்கள் ஆகும். இந்த நிலையில் சுற்றுலா செல்வதற்கு அரசு மக்களை அனுமதித்துள்ளதே பெரும் நிவாரணமாக இருக்கும்.
சில சுற்றுலா பயணிகள் 6 முதல் 7 மாதங்களுக்கு முன்னதாக புக் செய்துவிட்டனர். சென்னையிலிருந்து வந்த ஒரு பெண், 20 நாள்களுக்கும் மேலாக தங்கியுள்ளார். அவர் 7 மாதங்களுக்கு முன்னதாகவே புக் செய்தார்'' என்றார்.
கரோனா வைரசால் வீட்டிலேயே அடைக்கப்பட்டு வேலை செய்து வந்தவர்கள், தற்போது புத்துணர்ச்சிக்காக சுற்றுலா தலங்களுக்கு சென்று தங்களது வேலைகளை செய்வது ஃபேஷனாகி வருகிறது.
இதையும் படிங்க: மாலத்தீவில் மையம் கொண்ட அழகு புயல் டாப்ஸி!