கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் கொள்ளேகாலைச் சேர்ந்த பெண் ராஜாமணி(36). தனது மகளுடன் வசித்துவரும் இவர் அப்பகுதியில் உணவகம் நடத்திவருகிறார். இதுதவிர இவர் சுயஉதவிக் குழு ஒன்றையும் நடத்தி அப்பகுதி மக்களிடம் பணம் வசூலித்துள்ளார். பின்னர் அவர்களிடம் வசூல் செய்த ரூ. 11 லட்சம் அளவிலான பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் அப்பெண் ஒருமாத காலத்திற்கு பின் திரும்பியுள்ளார். அப்போது பணத்தைக் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் சிலர் ராஜாமணியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் தங்களின் பணத்தை தரும்படி மிரட்டியுள்ளனர். மேலும் அப்பெண்ணை சுற்றியிருந்த சிலர் அவரை காலணிகளைக் கொண்டு தாக்குமாறும் கூறியுள்ளனர்.
இந்த வீடியோவை அங்கிருந்த நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட, இது அப்பகுதியில் வைரலானது. இதையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தாவரகெரே காவல் துறையினர் அப்பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஏழு பேரை கைது செய்துள்ளனர்.