சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு தற்போதும் நீடிக்கும் நிலையிலும் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குச் செல்ல முடியாமல் உள்ளனர். கடந்த ஆண்டும் பக்தர்களின் கடும் போராட்டம் காரணமாக சபரிமலை வந்த பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி பாதுகாப்பு அளிக்க இயலாது என கேரள அரசும் கைவிரித்துவிட்டது.
இந்த நிலையில், பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று சபரிமலைக்கு செல்லவதற்காக கொச்சி வருகை தந்தார். அங்கிருந்து கொச்சி நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்ற திருப்தி தேசாய் குழுவினர் சபரிமலை செல்ல தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் படி கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், திருப்தி தேசாய் குழுவினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி சட்ட ஒழுங்கை சீர்குலைத்துவிட வாய்ப்புள்ளதாகக்கூறி காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அவர்களை மீண்டும் திரும்பிச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே கடந்த ஆண்டு சபரிமலை சென்ற இரு பெண்களில் ஒருவரான பிந்து அம்மினியும் திருப்தி தேசாய் உடன் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு கூடிய இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐயப்ப கோஷங்கள் இட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததோடு, போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒருவர் பிந்து அம்மினி மீது மிளகாய் ஸ்பிரே தாக்குதலும் நடத்தியிருந்தார். இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, இரவு சுமார் 8.30 மணி வரை காவல் ஆணையர் அலுவலகத்திலேயே காத்திருந்து திருப்தி தேசாய் குழுவினர் ஏமாற்றத்துடன் மீண்டும் நள்ளிரவில் மும்பை திரும்பினர்.
இதுகுறித்து கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருப்தி தேசாய், காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என தெரிவித்துவிட்டனர். இப்போது செல்கிறோம். ஆனால் மீண்டும் நாங்கள் சபரிமலைக்குச் சென்றே தீருவோம் இவ்வாறு கூறினார்.
'சபரிமலைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது' - திருப்தி தேசாய்