உத்தரப் பிரதேசம் மாநிலம், உன்னாவ் மாவட்டம் சுபன்கேடா டிக்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜினி. இவரது கணவர் அனந்து. இவர்களுக்கு சிவானி(7), ரோஷினி (5) என்ற இரு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (மே 25) அப்பகுதியில் உள்ள ஏரியில் சரோஜினி, அவரது இரு மகள்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் தண்ணீரில் மிதந்து கிடந்தனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் துறையினர், மூவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கிராம மக்கள் சரோஜினியின் கணவர் அனந்து மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
அதனடிப்படையில், அனந்துவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்குப் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மூவரையும் கொலை செய்தது நானும் எனது சகோதரரும் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, அனந்து, அவரது சகோதர் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மனைவி இரு மகள்களை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:24 வயது இளைஞர் கொலை!