டெல்லி தென்மேற்கு பகுதி ரிட்ஜ் சாலையில் புத்த ஜெயந்தி பூங்கா அமைந்துள்ளது. இங்கு இன்று (டிசம்பர்-11) காலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது காலை 9.45 மணியளவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தீடீரென தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டார்.
இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் அப்பெண் 95 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆளானார். பின்னர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரான சத்யபால் சிங் கூறுகையில், 'காலை பூங்காவில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அங்கு வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கொண்டு வந்து திடீரென தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருகிலிருந்தவர்கள் உதவியுடன் நாங்கள் அப்பெண்னை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கக்கப்பட்டது' என்றார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் 2 லிட்டர் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். அப்பெண் ஆபத்தான நிலையில் உள்ளதால் அவர் யார் என்ற விவரம் சேகரிக்க முடிவில்லை. அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடந்து வருகிறது.