நாட்டுக்கு தேவைப்படும்போது பணிசெய்யும் ஒரு குடிமகளாகவும், அதே சமயத்தில் பெற்றெடுத்த தன் குழந்தைக்கு ஒரு தாயாகவும் தனது கடமையை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் பரோடா நகரத்தின் குரஹ் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் சங்கீதா பர்மர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இரண்டு நாள் இந்திய பயணத்தின் முதன்மை இடம் வகிக்கும் குஜராத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக 10 ஆயிரம் காவலர்களை அம்மாநில அரசு பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் பணிக்குத் திரும்புமாறு பெண் காவலர் சங்கீதா பர்மருக்கு காவல் துறை தலைமையகம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.
12 மாத கைக்குழந்தையை தனியாக விட்டுச்செல்ல முடியாது என்பதால் தான் கடமையாற்றும் பணியிடத்திற்கு தன்னுடனே அழைத்துவந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்.
இந்தச் செய்தி அறிந்த ஊடகங்கள் சங்கீதா பர்மரிடம் பேசியபோது, "எனது குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான், அவனுக்கு எனது கவனிப்பு அவசியமாகத் தேவைப்படுகிறது. அதே நேரம் எனது அரசுக்கும் எனது பணி தேவைப்படுகிறது.
ஒரு காவல் அலுவலராகவும் அதே நேரத்தில் ஒரு தாயாகவும் என் கடமைகளை நான் செய்ய விரும்பினேன். இந்த இரண்டுக்கும் இடையே ஒன்றை விடுத்து மற்றொன்றைத் தேர்ந்தெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. இரண்டு கடமைகளையும் ஒன்றாகச் செய்யும்போது நான் எந்தத் துன்பத்தையும் எதிர்கொள்ளவில்லை எனச் சொல்லமாட்டேன். இருப்பினும், இரண்டையும் ஒரே சமயத்தில் ஆற்றுவதில் ஒரு மகத்தான திருப்தியை நான் அடைகிறேன்.
நான் எனது மகனுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், என் உறவினர்கள் இங்கிருந்து 24 கி.மீ. தூரத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் எனது குழந்தையை ஒப்படைக்கவும் முடியாது. அதே நேரம் என்னால் அவ்வளவு தூரம் பயணமும் செய்ய இயலாது" என்கிறார்.
பர்மரின் தனது மகனை கடமை இடத்திற்கு அழைத்துச் சென்று, அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருப்பதால், குழந்தைக்கு ஒரு சேலையில் தூளிக்கட்டி நிழலில் தூங்கவைத்து செல்வது பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
பெண் காவலர் சங்கீதா பர்மரின் இந்தக் காணொலியை பார்த்துப் பலரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர். கடமை உணர்வும், தாய்மை உணர்வும் ஒருசேர தெரிகின்றது என்பன போன்ற பல்வேறு பதிவுகள் அதில் குவியத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க : ட்ரம்ப் வருகையால் இந்தியா வல்லரசாகிவிடுமா? - உத்தவ் தாக்கரே கேள்வி