கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்ததன் விளைவாக பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில், பன்னேர்கட்டா நகரில் வசித்துவரும் 71 வயது மூதாட்டியான ராஷ்மி அம்மா இந்த கனமழை காரணமாக கழிப்பிடத்தில் வசித்து வந்துள்ளார்.
மகள், மருமகள், நான்கு பேரக்குழந்தைகள் என ராஷ்மி அம்மாவின் ஒட்டுமொத்த குடும்பமும் பத்துக்கு பத்து வீட்டில் வசித்து வந்த நிலையில், கனமழை காரணமாக அந்த வீடு சேதம் அடைய, அருகிலுள்ள பொது கழிப்பிடத்தில் வசிக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே, அவர்களுக்கு உதவும் நோக்கில் சமூக ஆர்வலர் அங்கு வந்துள்ளார். அவரைச் சந்தித்த பிறகு, சமூக ஆர்வலர் முன் ராஷ்மி அம்மா கதறி அழத் தொடங்கியுள்ளார். பின்னர், மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போதுதான் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மாநகராட்சியின் அனுமதியோடு அதே கழிப்பிடத்தில்தான் ராஷ்மி அம்மாவின் குடும்பம் தொடர்ந்து வசித்து வருகிறது.